﻿சங்.
113.
அல்லேலூயா, யெகோவாவுடைய ஊழியக்காரர்களே, துதியுங்கள்; யெகோவாவுடைய பெயரைத் துதியுங்கள். 
இதுமுதல் என்றென்றைக்கும் யெகோவாவுடைய பெயர் ஸ்தோத்திரிக்கப்படுவதாக. 
சூரியன் உதிக்கும் திசைதொடங்கி அது மறையும் திசைவரை யெகோவாவுடைய பெயர் துதிக்கப்படட்டும். 
யெகோவா எல்லா தேசங்கள்மேலும் உயர்ந்தவர்; அவருடைய மகிமை வானங்களுக்கு மேலானது. 
உன்னதங்களில் வாழ்கிற நம்முடைய தேவனாகிய யெகோவாவுக்குச் சமமானமானவர் யார்? 
அவர் வானத்திலிருந்து பூமியிலுமுள்ளவைகளைப் பார்க்கும்படி தம்மைத் தாழ்த்துகிறார். 
அவர் சிறியவனைப் புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார்; ஏழ்மையானவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். 
அவனைப் பிரபுக்களோடும், தமது மக்களின் அதிபதிகளோடும் உட்காரச்செய்கிறார். 
மலடியைச் சந்தோஷமான பிள்ளைத்தாய்ச்சியாக்கி, வீட்டிலே குடியிருக்கச்செய்கிறார். அல்லேலூயா. 
