﻿சங்கீ..
132.
கர்த்தாவே, தாவீது துன்புற்ற வகையை நினைத்துப்பாரும். 
தாவீது கர்த்தருக்கு ஒரு வாக்குறுதி அளித்தான். யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்கு தாவீது ஒரு விசேஷ வாக்குறுதி அளித்தான். 
தாவீது, “நான் என் வீட்டிற்குள் போகமாட்டேன், நான் என் படுக்கையில் படுக்கமாட்டேன், 
நான் தூங்கமாட்டேன், என் கண்கள் ஓய்வெடுக்க விடமாட்டேன், 
கர்த்தருக்கு ஒரு வீட்டை நான் கண்டுபிடிக்கும் மட்டும், யாக்கோபின் வல்லமையுள்ள தேவனுக்குரிய வீட்டை நான் காணும்மட்டும், இக்காரியங்களில் ஒன்றையும் நான் செய்யமாட்டேன்!” என்றான். 
எப்பிராத்தாவில் நாங்கள் இதைப்பற்றிக் கேள்விப்பட்டோம். கீரியாத் யாரீமில் உடன்படிக்கைப் பெட்டியை நாங்கள் கண்டோம். 
நாம் பரிசுத்தக் கூடாரத்திற்குச் செல்வோம். தேவன் பாதங்களை ஓய்வாக வைக்கும் பாதப்படியில் நாம் தொழுதுகொள்வோம். 
கர்த்தாவே நீர் ஓய்வுக்கொள்ளும் இடத்திலிருந்து எழும்பும். கர்த்தாவே, உமது வல்லமையுள்ள பெட்டியோடு எழும்பும். 
கர்த்தாவே, உமது ஆசாரியர்கள் நன்மையை அணிந்திருக்கிறார்கள். உம்மைப் பின்பற்றுவோர் மிகவும் மகிழ்ச்சியாயிருக்கிறார்கள். 
உமது பணியாளகிய தாவீதின் நன்மைக்காக, நீர் தேர்ந்தெடுத்த அரசனைத் தள்ளிவிடாதேயும். 
கர்த்தர் தாவீதுக்கு ஒரு வாக்குறுதியை அருளினார். தாவீதிடம் நேர்மையோடிருப்பதாகக் கர்த்தர் வாக்களித்தார். தாவீதின் குடும்பத்திலிருந்து அரசர்கள் வருவார்கள் என்று கர்த்தர் வாக்குறுதி அளித்தார். 
கர்த்தர், “தாவீதே, உனது பிள்ளைகள் என் உடன்படிக்கைக்கும் நான் கற்பிக்கும் சட்டங்களுக்கும் கீழ்ப்படிந்தால், உன் குடும்பத்தில் யாரேனும் ஒருவர் என்றென்றும் அரசராக இருப்பார்கள்” என்றார். 
அவரது ஆலயத்திற்குரிய இடமாக விரும்பி கர்த்தர் சீயோனைத் தேர்ந்தெடுத்தார். அந்த இடத்தையே தம்முடைய ஆலயத்திற்காக விரும்பினார். 
கர்த்தர், “என்றென்றைக்கும் எப்போதும் இதுவே என் இடமாக இருக்கும். நான் இருக்கப்போகும் இடமாக இதனைத் தேர்ந்தெடுக்கிறேன். 
நான் இந்நகரை மிகுதியான உணவினால் நிரப்பி ஆசீர்வதிப்பேன். ஏழைகளுக்கும் உண்ணும் உணவு மிகுதியாகக் கிடைக்கும். 
மீட்பினால் ஆசாரியர்களை நான் உடுத்துவிப்பேன். என்னைப் பின்பற்றுவோர் இங்கு மிகுந்த மகிழ்ச்சியடைவார்கள். 
இங்கு நான் தாவீதைப் பலப்படுத்துவேன். நான் தேர்ந்தெடுத்த அரசனுக்கு ஒரு விளக்கை அளிப்பேன். 
தாவீதின் பகைவர்களை வெட்கத்தால் மூடுவேன். ஆனால் நான் தாவீதின் அரசைப் பெருகும்படி செய்வேன்” என்றார். 
